
கம்பஹா, குளியாப்பிட்டியவில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5 பகுதிகளில் இருந்து உயர் தர பரீட்சார்த்திகள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சைக்கு தோற்ற முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாளை (22) முதல் ஆரம்பமாகவிருந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், குளியாப்பிட்டிய மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏனைய பகுதிகளில் நாளை ஆரம்பமாகும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
39 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.