
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ள புதிய திருத்தங்கள் அடங்கிய அறிக்கை..!
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் உள்ளடக்கப்படவுள்ள சில புதிய திருத்தங்கள் அரசாங்கத்தினால், இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட திருத்தம் மற்றும் ஆளுங்கட்சியினது பங்காளிக்கட்சிகள் வழங்கிய புதிய அரசியலமைப்பு தொடர்பான உள்ளடக்கங்களுக்கு மேலதிகமாக இந்த திருத்தம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது
கையளிக்கப்படவுள்ள அனைத்து திருத்தங்களையும் இன்றைய தினம் நாடாளுமன்றில் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்ஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20ஆம் சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆம் உட்பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20ம் திருத்தச்சட்ட மூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் 3 இல் 2 பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
இதற்கமைய சட்டமூலத்தின் 14 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
20 ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 39 மனுக்களும், 8 இடையீட்டு மனுக்களும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள், ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அண்மையில் இடம்பெற்றன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட ஆயம், அந்த மனுக்களை பரிசீலனைக்கு உட்படுத்தியது.
இதையடுத்து, கடந்த 5ஆம் திகதி நீதியரசர்கள் ஆயத்தின் வியாக்கினத்தை சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.