நாட்டில் 5811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 5811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,811 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (20) 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட மினுவாங்கொடை கொத்தணி மற்றும் அலுவலக உறுப்பினர்கள் 37 பேர் அடங்குகின்றனர்.

அவர்களோடு தொடர்புகளை பேணிய 143 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

இதனடிப்படையில், மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை இரண்2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 06 பேர் வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர்.

நேற்று 17 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,457 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் கொழும்பு நகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடங்குவதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் நிபுணர் தினுகா குருகே தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட விசாரணைப்பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு – 13 இல் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய 04 ஊழியர்களுக்கும் COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் நிபுணர் தினுகா குருகே தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் முதலாம் கட்டத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளை அடுத்து இவர்கள் கண்டறியப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் நிபுணர் கூறினார்.

இதேவேளை, COVID – 19 தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 200 PCR பரிசோதனைகள் அறிக்கைகள் இன்று (21) கிடைக்கப்பெறவுள்ளதாக களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தார்.

மாவட்டத்தில் சுமார் 700 குடும்பங்களை சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்டோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.