இலங்கையில் அடுத்த வருடம் முதல் அமுலாகவுள்ள தடை - அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அடுத்த வருடம் முதல் அமுலாகவுள்ள தடை - அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அடுத்த வருடம்(2021) முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் சபை அதிகார தெரிவித்துள்ளது.

பொலித்தீன், பிளாஸ்டிக் முகாமைத்துவம் தொடர்பான பங்குதார நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் உடன்பாடுகளுக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்களாக,

 

  • பொதிகளில் இரசாயனப் பொருட்களோ கிருமிநாசினிகளைப் பொதியிடல் தடை - இதற்கு மாற்று வழிமுறையாக கண்ணாடி அல்லது வேறு மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொதிகளைப் பயன்படுத்தல்,
  • 20 மில்லிலீற்றர்/ 20 கிராம்களுக்குக் குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய பைக்கற்றுக்களைத் தடை செய்தல்(உணவு மற்றும் மருந்துகள் தவிர்ந்த) - மற்றும் மாற்று வழிமுறையாக 100 மில்லிலீற்றர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு அதிகமான பைக்கற்றுக்களைப் பயன்படுத்தல்,
  • பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட காற்று அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் தடை செய்தல்(பலூன், பந்து வகைகள் மற்றும் நீரில் மிதக்கும் விளையாட்டுப்பொருட்கள் தவிர்ந்த) - இதற்கான மாற்று வழிமுறையாக சுற்றாடல் நேயமிகு ஆரோக்கியமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தல்,
  • பிளாஸ்டிக் காதுத்துடைப்பு தடை செய்தல் (சுகாதாரச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்கள் தவிர்ந்த) - இதற்கு மாற்று வழிமுறையாக உக்கலடையக் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட காதுத் துடைப்பு பயன்படுத்தல்,
  • அனைத்துவித பிளாஸ்டிக் உற்பத்திகளின் மீள் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் சிபார்சு செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை அடையாளம் காணும் வகையில் 1-7 வரையான குறியீடு பொறித்தலை கட்டாயமாக்கல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இதேவேளை இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.