
கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக தற்காலிக முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அங்கு சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து மீண்டும் அந்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் காலி - கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர் பணிக்காக அம்பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கி தினந்தோறும் பேருந்து அல்லது தொடருந்தில் பயணித்துள்ளதாக சுகாதாரத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 58 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவற்றில் 40 உந்துருளிகளும், 12 முச்சகரவண்டிகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மற்றும் வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 134 பேர் ஹெரோயின் போதைப்பொருளை தம்சம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, அவர்களிடம் இருந்து 246 கிராமுக்கும் அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் 2 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் 48 பேரும், 2 கிராமுக்கும் அதிக ஐஸ் ரக போதைப்பொருளுடன் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.