நாட்டில் 5625 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 5625 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 2,172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் நேற்று 37 பேர் குணமடைந்ததுடன், குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,440 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்று (19) 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 15,000 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

இதுவரை கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1,600 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, கொழும்பு கப்பல் இறங்குதுறையில் மேலும் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொழும்பு நகரத்தில் மாத்திரம் 18 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்ட மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒவிடிகல, பதுகம மற்றும் பதுகம புதிய குடியேற்றம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் 250 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் கிடைக்கவுள்ளதாக களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 43 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.