பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டினுள் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் வீட்டின் மேற்கூரை பாழடைந்த நிலையில் விழுந்து விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.