மேற்கு தலைவாசல் வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகள்

மேல்திசை என்று சொல்லப்படும் மேற்குதிசை நோக்கிய தலைவாசல் அமைக்கப்பட்ட வீடுகளை பலரும் விரும்புவதில்லை. ஆனால், வாஸ்து சாஸ்திரம் மேற்கு திசைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

பகல் முழுவதும் உலகிற்கு ஒளியை தரும் சூரியன் மாலையில் மேற்கு திசையில் அஸ்தமனம் ஆகிறது. வாஸ்து மற்றும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்ற சூரியனின் அஸ்தமன திசையான மேற்கு என்பது சனி கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட திசையாக குறிப்பிடப்படுகிறது. மேல்திசை என்று சொல்லப்படும் இத்திசை நோக்கிய தலைவாசல் அமைக்கப்பட்ட வீடுகளை பலரும் விரும்புவதில்லை. ஆனால், வாஸ்து சாஸ்திரம் மேற்கு திசைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

கடும் உழைப்பாளிகள்

மேற்கு திசை நோக்கி வீட்டின் தலைவாசல் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் நீண்ட ஆயுள் பெறுவதுடன், நோய்களால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு தலைவாசல் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கடும் உழைப்பாளிகளாக, எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள் என்றும் வாஸ்து ரீதியான தகவல் உண்டு.

தொழில் துறையினருக்கு ஏற்றது

சனி என்ற கிரகம் உலோகங்களில் இரும்பு மீது ஆதிபத்தியம் கொண்டது. அதன் அடிப்படையில், இரும்பு வியாபாரம், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு, மேற்கு திசையில் தலைவாசல் அமைந்துள்ள வீடுகள் மிகுந்த நன்மையை தருவதாக ஐதீகம்.

மகரம், கும்பம் ராசிகள்

ஜோதிட ரீதியாக சனியின் ராசிகளான மகரம், கும்பம் ஆகியவற்றில் பிறந்தவர்கள், மேற்கு திசை தலைவாசல் கொண்ட வீடுகளில் சொந்தமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ தேர்வு செய்து வசிப்பது நன்மைகளை அளிக்கும். அதன் மூலம், ஆயுள் பலம் மற்றும் செல்வ வளம் ஆகியவை கிடைக்கும் என்றும் வாஸ்து சாஸ்திர விதிகள் குறிப்பிட்டுள்ளன.