பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் ராவல்பிண்டியில் நடந்து வரும் தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பலுசிஸ்தான் அணிக்காக விளையாடினார். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த தெற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

 


இந்த நிலையில் 36 வயதான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார். உமர் குல் 2003 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 47 டெஸ்டில் 163 விக்கெட்டும், 130 ஒருநாள் போட்டியில் 179 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 85 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கான அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அபாரமான ‘யார்க்கர்’ பந்து வீச்சு மூலம் உமர் குல் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.