தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 100 பேர் இன்று விடுவிப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 100 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறவெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து மேலும் 150 பேர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 52 ஆயிரத்து 612 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக காணப்படுகிறது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஆயிரத்து 800 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய வைத்தியசாலை, கம்புறுகமுவ வைத்தியசாலை, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை, தெல்தெனிய வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை என்பவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 357 ஆக காணப்படுகிறது.
293 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.