பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் 194 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 114 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றில் இருந்து குணமடைநடதவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 285 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், ஏனைய 276 பேருக்கும் கொவிட்- 19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்;ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் 19 தொற்றுறுதியானவர்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டின்ன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.