ஐதராபாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுமா?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்க இருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப்ஸ் என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடமிருக்கும். ஆனால் இந்த முறை அது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

 

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை சென்னை அணி முதல் பாதி போட்டிகளில் இப்படி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையை எதிர்கொண்டது கிடையாது.

 

ஆர்.சி.பி.க்கு எதிரான தோல்விக்குப்பின் பேட்டியளித்த எம்எஸ் டோனி, சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒன்றை சரி செய்தால் மற்றொன்று உருவாகிறது எனக் கூறினார். இதிலிருந்தே டோனிக்கு தன்னம்பிக்கை போய்விட்டது என்பமு சற்று தெரியவந்துள்ளது.

ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக வெற்றி பெற்றதும், அப்பாடா சென்னை அணி ஃபார்முக்கு வந்து விட்டது என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கொல்கத்தா, ஆர்சிபி-க்கு எதிராக தோல்வியை சந்தித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அடுத்த ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்ஸ் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை துபாய் ஆடுகளத்தில் சந்திக்கிறது.

 

துபாய் ஆடுகளம் சற்று கடினமான (Tricky) ஆடுகளம். முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். முதலில் பந்து வீசினால் 150 முதல் 160 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி  என்றால்தான் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். இந்த மைதானத்தில் சிஎஸ்கே நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியடைந்த போட்டிகளில் சேஸிங்கின்போது 157 ரன்னைத் தாண்டியது கிடையாது.

 

ஏற்கனவே நடைபெற்ற சிஎஸ்கே - ஐதராபாத் போட்டியில் சென்னை அணி 165 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் 7 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

 

இந்த போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, வில்லியம்சன் ஏமாற்றம் அளித்த நிலையில் பிரியம் கார்க் (26 பந்தில் 51 ரன் நாட்அவுட்), அபிஷேக் ஷர்மா (24 பந்தில் 31 ரன்கள்) சிறப்பாக விளையாடினர்.

 

சேஸிங் செய்யும்போது டோனி 47 ரன்களும், ஜடேஜா 50 ரன்கள் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ் (22), வாட்சன் (1), ராயுடு (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே காரணம்.

 

துபாயில் நான்கு ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ், வாட்சன் ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைத்ததுதான். 179 இலக்கை விக்கெட் இழக்காமல் அடித்தனர்.

 

பவர் பிளேயில் ரன்கள் அடிக்கா விட்டாலும் இருவரும் களத்தில் நின்றாலே அது சென்னை அணிக்கு சாதகம்தான். டு பிளிஸ்சிஸ் (17 கேகேஆர், 8 ஆர்சிபி) கடைசி இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. இது சிஎஸ்கே-வுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

 

ஆர்.சி.பி.க்கு எதிராக அறிமுகம் ஆன ஜெகதீசன் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 33 ரன்கள் அடித்தார். அவர் இன்னும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அம்பதி ராயுடு இன்னிங்சை கடைசி வரை கொண்டு செல்வதும் அவசியம்.

 

டோனியின் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் ஹிட்டர் இல்லாதது அணிக்கு பலவீனமாக இருக்கிறது.

 

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளே-யில் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஆனால் சாம் கர்ரன் டெத் ஓவரில் கோட்டை விட்டு விடுகிறார். ஆர்சிபிக்கு எதிராக 18-வது ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

 

தீபக் சாஹரை முழுவதுமாக பவர் பிளேயில் பயன்படுத்தாமல் டெத் ஓவரில் பயன்படுத்தினால் டெத் ஓவர் சற்று பலம் பெறும். சுழற்பந்து வீச்சு பேசும்படி மிகப்பெரிய அளவில் இல்லை. வெயின் பிராவோ மிடில் ஓவரை ஸ்பின்னர்களுடன் சேர்ந்து சமாளிக்கிறார்.

 

அவர் விக்கெட் வீழ்த்தினால் மிடில் ஓவர் ஸ்ட்ராங் ஆகும். மொத்தத்தில் டெத் ஓவரில் ரன்னை கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அசத்தினால் மட்டுமே சென்னை அணி வெற்றியை ருசிக்க முடியும்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 3-ல் வெற்றி 4-ல் தோல்வியோடு 5-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணிக்கு முதுகெலும்பே வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர்தான். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தால் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க் உள்ளனர்.

 

கேன் வில்லியம்சனுக்கு அதிக பந்துகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதிக்க வேண்டும் என்றால் இவரது பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

 

பந்து வீச்சில் ரஷித் கான், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு பலம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் ரஷித் கான் பந்து வீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. புவி காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. கலீல் அகமது, சந்தீப் சர்மா நேர்த்தியாக பந்து வீசுவது கடினம்.

 

வார்னர் முதலில் பேட்டிங் எடுத்து 170 முதல் 180 ரன்கள் அடித்து, அதற்குள் சிஎஸ்கே-வை கட்டுப்படுத்த முயற்சிப்பார்.