மக்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்- இராணுவத்தளபதி

மக்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்- இராணுவத்தளபதி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சவேந்திரசில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊடாக, இரண்டாவது நபர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பி.சி.ஆர்.பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரி வருகிறார்கள். ஆனால், முதல் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு 6நாட்களுக்குப் பின்னரே இரண்டாவது தொற்றாளருக்கு பி.சி.ஆர்.ஊடாக தொற்றை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, மக்கள் இந்த செயற்பாட்டை புரிந்துக்கொள்ள வேண்டும். மேலும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களையும் நாம் தனிமைப்படுத்தியுள்ளோம். குறித்த பிரதேசங்களையும் முடக்கியுள்ளோம்.

பி.சி.ஆர்.பரிசோதனைக்கு எவரேனும் உட்படுத்தப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதைப் பொறுத்துதான் ஊரடங்கு குறித்து தீர்மானிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.