சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோகும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கான ஆலயத்துக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது சட்டவிரோத நடவடிக்கைக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்கள் துணைபோவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கிழவன்குளம் பகுதியில் தனியார் ஒருவருக்கு வாழ்விடத்திற்கென வழங்கப்பட்ட காணியில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக கிறிஸ்தவ சபைக்கான ஆலயம் ஒன்றினை அமைத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும் பிரதேச சபைக்கும் பலதடவைகள் அறிவிக்கப்பட்டும் குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கான சட்ட நடவடிக்கைகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் மாறாக சட்டவிரோத நடவடிக்கைக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்கள் துணைபோவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பிரதேச சபை தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதனை தொடர்ந்து கட்டிட பணிகளை நிறுத்துமாறு பிரதேச சபையினால் 2019-12-31 அன்று கட்டிடத்தில் தடை உத்தரவு பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
அந்த தடையுத்தரவு பிரசுரத்தை கிழித்தெறிந்த ஆலயத்திற்கான கட்டுமான பணியை மேற்கொண்ட நபர்கள் தொடர்ச்சியாக சபை கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். விடுமுறை தினங்களை மையப்படுத்தி மிகத் துரிதமாக இரகசியமான முறையில் இந்த வேலைத்திட்டங்கள் நகர்த்தப்பட்ட போது மீண்டும் இந்த விடயம் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மீண்டும் கட்டிடத்திற்கான தடையுத்தரவை பிரதேச சபையினர் 2020-03-17 அன்று வழங்கி கட்டுமான பணிகளை நிறுத்தியிருந்தனர்.
எனினும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் தொடர்பில் எந்த சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை முதல் தடவை சுட்டிக்காட்டிய போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இரண்டாவது தடவையும் ஒட்டப்பட்ட பிரசுரம் கிழிக்கப்பட்டு வேலைத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக பிரதேச சபைக்கு கிராமத்தில் இருந்து சென்ற எதிர்ப்புகளின் விளைவாக பிரதேச சபையினால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதோடு கட்டுமான பணிகள் பூரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் குறித்த காணி தனிநபர் ஒருவருக்கு வாழ்விடத்துக்கென வழங்கப்பட்ட காணி எனவும் புத்தசாசன அமைச்சின் அனுமதி இன்றிஆலயத்தை சட்டவிரோதமாக அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் அவர்கள் குறித்த காணியை சட்ட விரோதமாக கட்டப்படட கிறிஸ்தவ சபைக்கு வழங்குவதற்கு 14.09.2020 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச காணி பயன்பாட்டு குழுக் கூட்டத் தீர்மானத்துக்காக கொண்டு வந்திருந்தனர். இதன்போது கிராமத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஒருவர் சட்டவிரோதமான செயற்பாடுகளை நீங்கள் இவ்வாறு சட்ட நடவடிக்கையாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கையானது எதிர்காலத்தில் தொடர்ச்சியாக அனைவரையும் சட்டவிரோதமான செயற்பாடுகளை செய்து அதனை சட்டபூர்வமாக ஆக்குவதற்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில் குறித்த காணி வழங்கப்படுவதில்லை என தீர்மானித்து காணிப் பயன்பாட்டு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் சட்டவிரோத கட்டிடத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் அ.தவகுமாரன் காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார்.
இவ்வாறாக சட்டவிரோதமாக ஒருவருடைய வாழ்விட காணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படாத நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் தாண்டியும் குறித்த கட்டிடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறு பின்புலங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் காலப்பகுதியில் இருந்த தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் திருமுறிகண்டி பகுதியில் பல்வேறு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து இருக்கின்ற போதும் இந்த விடயத்தில் குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதனைவிட புதிதாக வருகைதந்த தவிசாளர் அ.தவக்குமாரன் ஒட்டுசுட்டான் காணி பயன்பாட்டுக்குழு கூட்டத்தில் உறுதியளித்த போதும் சட்டநடவடிக்கைக்கான எந்த விடயங்களையும் எடுக்கவில்லை மாறாக அவரும் சட்டவிரோத கட்டிடத்துக்கு சட்டரீதியான ஆவணம் வழங்க முயற்சிக்கின்றமை தெரியவருகிறது.
இவ்வாறான நிலையில் 08-10-2020 புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் குறித்த கட்டிடத்திற்கான சட்டவிரோத கட்டுமான பணிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்காது குறித்த காணியை உரிய முறையில் வழங்கி ஆலயத்தை சட்டபூர்வமாக அந்த இடத்தில் அமைப்பதற்கு என பல்வேறு முயற்சிகளின் பின்னணியில் பிரதேச சபையில் மீண்டும் அந்தக் காணியை காணிப் பயன்பாட்டு குழு கூட்டத்திற்கு அனுப்பி அந்த காணியை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுத்து அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இவர்களுக்கு சாதகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு இவர்கள் நடக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகவும் இந்த விடயங்கள் பிரதேச செயலகம் பிரதேச சபை ஆகியவற்றிடம் கோரப்பட்ட போதும் இதற்கான மழுப்பலான பதில்கள் வழங்கப்பட்டிருந்த போதும் உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. மாறாக இந்த விடயம் தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டும் இதுவரை இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மீண்டும் பிரதேச சபை அமர்வில் இந்த விடயங்களை எடுத்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நடவடிக்கை எடுக்காது அதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்நிற்பதன் நோக்கம் என்ன இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.