இரண்டு ஓவரில் போட்டியை கோட்டை விட்ட பஞ்சாப்: 2 ரன்னில் பரிதாப தோல்வி

இரண்டு ஓவரில் போட்டியை கோட்டை விட்ட பஞ்சாப்: 2 ரன்னில் பரிதாப தோல்வி

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் போட்டி டை ஆக இருந்த நிலையில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடிக்க 2 ரன்னில் தோல்வியைத் தழுவியது பஞ்சாப்.

 

ஐபிஎல் கிரிக்கெட்டின் 24-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த கொல்கத்தா தினேஷ் கார்த்திக் (58), ஷுப்மான் கில் (57) ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.

 

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் மந்தமாக விளையாடினர்.

 

 

பவர் பிளேயில் 47 ரன்களும், 10 ஓவரில் 76 ரன்கள் அடித்தது பஞ்சாப். கேஎல் ராகுல் 42 பந்தில் அரைசதம் அடித்தார். மயங்க் அகர்வால் 33 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். 16-வது ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ஓவரில் 136 ரன்கள் எடுத்திருந்தது.

 

கடைசி 24 பந்தில் 29 ரன்களே தேவைப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி எளிதான வெற்றிபெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். 17-வது ஓவரை சக்ரவர்த்தி வீசினார். இதில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தது கேகேஆர். அடுத்த ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவர் ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை சீர்குலைத்தது.

 

2-வது பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 

 

19-வது ஓவரை பிரதீஷ் வீசினார். இந்த ஓவரில் சிம்ரன் சிங் (4), கேஎல் ராகுல் (74) ராகுல் ஆட்டமிழக்க 6 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப். இந்த இரண்டு ஓவரரோடு பஞ்சாப் தோல்வி உறுதியானது.

 

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விரட்ட ஐந்தாவது பந்தில் விக்கெட் வீழந்தது. இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் அந்த பந்தை சிக்சருக்கு தூக்கி ‘டை’ ஆக்க முயற்சி செய்தார். ஆனால் பவுண்டரி சென்றதால், 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லைப்ஸ்டைல் செய்திகள்