தங்க வியாபாரியிடமிருந்து மோசடி செய்து பணம் பெற்ற முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது
தங்க விற்பனையாளர் ஒருவரிடமிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, இவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை தங்க நகைகளை தங்க வியாபாரியிடம் விற்பனை செய்தபோது, அதனை சட்ட சிக்கலுக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக உயர் அதிகாரியொருவருக்கு குறித்த பணத்தை வழங்குவதாக தெரிவித்தே முன்னாள் நகரசபை உறுப்பினர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.