சிலாபத்தில் அடையாளம் காணப்பட்டவரிடமிருந்த கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள்....!
கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த மூன்று ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுயுறுதியாகியுள்ளது.
இலங்கை முதலீட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
குறித்த மூன்று ஆடைத் தொழிற்சாலைகளிலும், சுமார் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்ற நிலையில், அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிலாபம் பகுதியில் கொரோனா தொற்றுறுதியான 36 வயதுடைய ஒருவர், கடந்த மாதம் 23ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், கொழும்பு பேருந்து தரிப்பிடத்திற்கும் சென்றுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர், கடந்த 30 ஆம் திகதி நுவரெலியாவுககு பயணம் மேற்கொண்டிருந்தாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருதானை புனித ஜோசப் வித்தியாலய மாணவன் உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, பொறளை - சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது,
சுகயீனம் காரணமாக குறித்த குழந்தை கடந்த 7 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.
இந்த நிலையில், குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குழந்தை தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொரளை - சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 5 மாத குழந்தையின் தந்தைக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அந்த குழந்தை 2 மாதங்களாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
குறித்த குழந்தை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக நாளைய தினம் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்படவிருந்தது.
இந்தநிலையில் குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.
அவர்கள் கண்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், குழந்தையின் சிகிச்சை காரணமாக கொட்டிகாவத்தையில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தநிலையில், வைத்தியசாலையின் சேவையாளர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு, பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.