தாங்க முடியாத சோகத்துடன் அமைதியாக வந்து சுசாந்த் சிங்கின் உடலை பார்த்து சென்ற ரியா சக்கரபார்த்தி!
சினிமா பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கடந்த 6 மாத காலமாக சுசாந்த் சிங் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சுசாந்த் சிங்கும் பாலிவுட் நடிகை ரியா சக்ரபார்த்தியும் காதலித்து வந்தாக சொல்லப்படுகிறது. இவர்கள் ஜோடியாக சுற்றுவதை பாப்பரஸி போட்டோகிராபர்கள் படமும் பிடித்துள்ளனர். பாந்திராவில் உள்ள ஜிம்முக்கு கூட இருவரும் சேர்ந்தே செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
மும்பையில் சுசாந்த் சிங்குடன் ரியா சக்ரபார்த்தி லிவிங் டுகெதரில் இருந்தார் என்றும் , திடீரென்று, ரியாவை அவரின் வீட்டுக்கு சுசாந்த் சிங் அனுப்பி விட்டதாகவும் தகவல் இருக்கிறது.இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. தற்கொலைக்கு முன் தன் நெருங்கிய நண்பரும் 'கோலாப்பூர் டயரிஸ் ' பட நடிகருமான மகேஷ் ஷெட்டிக்கும் சுசாந்த் சிங் போன் செய்துள்ளார். ஆனால், மகேஷ் ஷெட்டி போனை எடுக்கவில்லை. சுசாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதும் சந்தேகத்தின் பேரில், ரியா சக்கரபார்த்தி மற்றும் மகேஷ் ஷெட்டியிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இருவர் வாக்குமூலத்தையும் பதிவும் செய்துள்ளனர். மும்பை ஜூகுவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுசாந்தின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சமயத்தில் சுசாந்தின் காதலி என்று சொல்லப்படும் நடிகை ரியா சக்கரபார்த்தி கூப்பர் மருத்துவமனைக்கு சென்றார். துக்க நிகழ்ச்சிகளில் அணியும் வெள்ளை நிற உடை அணிந்திருந்த ரியா, சுசாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துள்ளார். மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது ரியாவின் முகத்தில் கடும் வேதனை தெரிந்தது. வரும் நவம்பர் மாதத்தில் சாந்த்சிங் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் , ஆனால் பெண் யாரென்று தங்களுக்கு தெரியாது என்று அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மீடியாக்களில் தற்போது கூறியுள்ளார். அந்த பெண் ரியா சக்கரபார்த்தியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சுசாந்த் சிங்கின் உடல் வில்லே பார்லே மின்மயானத்தில் இன்று எரியூட்டப்படுகிறது.