இலங்கையில் கொரோனா தொற்று! இலங்கை குறித்த பயண ஆலோசனையை புதுப்பித்த பிரித்தானியா
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இங்கிலாந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் மினுவாங்கொடை மற்றும் வெயாங்கொட ஆகிய பிரதேசங்களில் காணப்படும் கொரோனா தொற்றுநிலைமைகள் காரணமாக தமது பயண முடிவுகளைப் பரிசீலிக்குமாறு இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கையின் கொரோனா தாக்கநிலை காரணமாக குறுகிய கால அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்குத் திரும்ப விரும்பும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் நாடு தழுவிய ரீதியில்,கண்காட்சிகள், மாநாடுகள், கட்சிகள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் போன்ற பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதுடன், முகக்கவசங்களை அணியத் தவறுபவர்கள் கட்டாயமாக அங்கு 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறுவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கான தமது பயண நடவடிக்கைகள் தொடர்பாக அனைவரும் மீள் பரிசீலனை செய்து கொள்ளுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.