வானுர்தி தளத்திலே பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்
நாட்டிற்கு இன்றைய தினம் வருகை தரவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜீச்சி உள்ளிட்ட தரப்பினருக்கு வானுர்தி தளத்திலே பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர்களது இலங்கை விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் ஒருநாள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பதாகவும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்படமாட்டார்கள் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைத்தளங்களில்; வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் இந்த பதிலை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரசாங்க சேவைகள், மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள நாடாளுமன்ற விவகார பிரிவின் பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
இதனால் நேற்றைய தினம் குறித்த அலுவலகத்துக்குள் பிரவேசிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு
கொவிட் 19 வைரஸ் ஏற்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும்
செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழமைபோன்று நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.
அத்துடன், நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.
ஒருவேளை, 20வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரின் ஊடாக சபைக்கு அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை மீண்டும் கூட்டி, 20வது திருத்தத்தை விவாதிக்கும் வகையில் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்வதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.