இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்
இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று சமூகத் தொற்றாக உருவெடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தகவல் வெளியிட்டுள்ள அவர்,
திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அத்துடன், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இருக்க முடியாது. அவர்கள் வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும்.
இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோர் இதுவரை வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தலுக்குட்படாதவராயின் 011 3 456 548 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.