யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 61 பேர் தொடர்பில் வெளிவந்த செய்தி
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும் எதிர்வரும் வியாழக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியப் புடவை வியாபாரி இணுவில் தியேட்டர் ஒழுங்கைப் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
அவர் அந்தப் பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று வந்துள்ளதுடன், ஏழாலைப் பகுதியில் உள்ள 10 வீடுகளுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம்.இவ்வாறாக 3 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 28 பேருக்கு இரண்டு கட்டங்களாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரே.
அவர் இந்தியாவிற்கு சென்றிருக்கும் நிலையில் அவருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதனால் நாம் யாழ்ப்பாணத்தில் அவர் சென்று பழகியவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியிருந்தோம்.
இந்நிலையில் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைவதாலும் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாலும், எதிர்வரும் வியாழக்கிழமை அவர்களை விடுவிக்கவுள்ளோம். என தெரிவித்தார்.