கொரோனா தொடர்பிலான முழுமையான தகவல் இதோ...!

கொரோனா தொடர்பிலான முழுமையான தகவல் இதோ...!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 4 பேர் நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு இன்று பிற்பகல் கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த கொத்தணியில் மொத்தமாக ஆயிரத்து 28 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பெரிய கொத்தணியாக மினுவாங்கொடை - ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை நிலவுகிறது.

இதற்கு முன்னர் கந்தகாடு முகாம் மற்றும் சேறுவில கடற்படை முகாம் என்பன அதிகபடியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளாக இருந்தன.

அதேவேளை வெலிசரயில் உள்ள ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளார்.

ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான வெலிசரை தொழிற்சாலையில் நேற்று 500 பேருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதேநேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியாளராக உள்ள ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சிலாபத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் சேவையாளர்களுக்கு இடையே காது கேளாத தன்மை நிலவியதாக தகவல் கிடைத்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான மினுவாங்கொடை பகுதியை சேர்நத பெண்ணுக்கு இடைநடுவே கொவிட் 19 தொற்றுறுதியாகி இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிக்கு அமைய அநுரதாபுரம், பதுளை, காலி, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 பரவலை கட்டுப்பத்துவதற்காக காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு, காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0115 97 87 01, 0115 97 87 03, 0115 97 87 19, 0115 97 87 22, 0115 97 87 37, 0112 47 27 57 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

இதேநேரம், 0112 44 44 80, 0112 44 44 81, 0115 97 87 16, 0115 97 87 31 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையத்திற்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் பலர் தொடர்ந்தும் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வத்தளை, கந்தானை, ஜா-எல, பியகம, கிரிபத்கொட, சப்புகஸ்கந்த, பேலியகொட, களனி, கடவத்தை, மீகஹாவத்தை, ராகம மற்றும் மாபாகே போன்ற இடங்களில் வசிக்கின்றவர்கள், அந்தந்த பிரதேசங்களில் குறித்து ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லுமாறு காவற்துறையினரால் இன்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கொவிட் 19 நோய் தொற்று உறுதியாகி இருந்த 62 வயதான நபர் ஒருவர் றாகம வைத்தியாலையில் இருந்து இன்று காலை தப்பிச் சென்றிருந்தார்.

எனினும் அவர் மீண்டும் வைத்தியாலையின் வெளிநோயார் சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் வைத்திசாலையில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை என்றும் அவர் ஏற்கனவே தங்கி இருந்த நோயாளர் சிகிச்சை அறையில் இருந்து வெளியேறி பிரிதொரு அறையில் தங்கி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாட்டில், சமுத்தில் இருந்து கொவிட் 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக பலர் அந்த கொத்தணியை மையப்படுத்தி அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்தநிலையில் அந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர, கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இந்த தொழிற்சாலையின் பணியாளர்கள் மத்தியில் நோய்வாய் படும் நிலைமை நிலவியமை தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களை தாக்கிய வைரசைக் காட்டிலும், தற்போது ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களைத் தாக்கிய வைரஸின் பருமன் அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம்.

ஒன்று இங்கு அடையாளம் காணப்படுகின்ற நோயர்கள் புதிய நோயாளர்களாக இருக்கலாம்.

இரண்டாவது அதிகபடியான வைரஸ்கள் ஒரு நோயாளரை தாக்கி இருக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலைமையில், குறித்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக இருக்கும் என்பதால், அது வேகமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் அபாயம் இருக்கிறது.

மேலும் இந்த வைரஸானது, உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தாது என்பதால் இன்னும் சில வாரங்களுக்குப் பின்னரே இந்த வைரஸ் தாக்கப்பட்ட நோயாளர்களை அதிகமாக அடையாளம் காணக் கூடியதாக இருக்கும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து இன்று மேலும் 8 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு வெளியில் சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற, கம்பஹா வைத்தியசாலையின் சிரேட்ட வைத்தியர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் குறித்த வைத்தியரிடம் கடந்த தினம் சிகிச்சைப் பெற வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதுஎப்படி இருப்பினும், மினுவாங்கொடை கொத்தணியில் முதலாவதாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் பரவியது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இதனை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், அது மிகவும் கடினமானதாக இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாலபேயில் உள்ள நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையை, கொவிட்19 நோயாளர் சிகிச்சை மையமாக மாற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி - கலஹா - லெவனன் தோட்டம் - நிவ்பொறஸ்ட் பிரிவில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22 வயதுடைய பெண் ஒருவருக்கு, கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புப்புரஸ்ஸ பொது சுகாதார பரிசோதகர் சந்தன பண்டார கருணாதிலக்க எமது செய்திச் சேவைக்கு இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

குறித்த பெண், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில், பணியாற்றிய நிலையில், கடந்த 4 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர்.

அவருக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொற்றுறுதியாகியுள்ளதாக புப்புரஸ்ஸ பொது சுகாதார பரிசோதகர் சந்தன பண்டார கருணாதிலக்க தெரிவித்தார்.

இதேநேரம், மற்றுமொறு பெண்ணுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.