ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவரும் இந்தியா- RRAG

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவரும் இந்தியா- RRAG

உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறி வருவதாக உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வு குழு (RRAG) தெரிவித்துள்ளது.

உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வு குழு வெளியிட்டுள்ள  ஆய்வறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ‘இந்தியாவில் கடந்த 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைக் காலப்பகுதியில் 55 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள், உடல் ரீதியான தாக்குதல் மற்றும் சொத்துக்கள் அழிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர்.

மேலும் இவர்கள் கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தியமையினால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் உத்தரபிரதேசம் (11 ஊடகவியலாளர்கள்), ஜம்மு-காஷ்மீர் (6 ஊடகவியலாளர்கள்) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (5 ஊடகவியலாளர்கள்) ஆகிய பகுதிகளிலேயே  பதிவாகியுள்ளன.

இவைகளை பார்க்கின்றப்போது உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது’ என குறித்த ஆய்வறிக்கையில் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.