வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!

வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!

யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்று முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார்.

நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்  ”நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக எமது சபையின் எல்லைக்குள் இருக்கும் பொதுச் சந்தைகள் பூட்டப்பட்டன. அதற்கு மாற்றீடாக பொது இடங்களில் சமூக இடைவெளிகளை பின்பற்றி வியாபாரம் செய்ய சந்தை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலரும் வீதிகளில் மரக்கறி, மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.எனினும் தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது. நாம் எமது சபையின் பொதுச் சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி சந்தைகளை திறந்துள்ளோம்.

எமது மக்களும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி சந்தைக்கு வியாபரிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். வியாபாரிகளும் தங்களின் சந்தை வியாபார நடவடிக்கைகளை வழமைபோல முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இன்றிலிருந்து வீதிகளில் மரக்கறிகள், மீன்கள் விற்பனை செய்ய முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”  என தெரிவித்தார்.