அடுத்த 48 மணி நேரம் மிகவும் தீர்மானகரமானது! பரீட்சைகள் நடத்துவதா? இல்லையா? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக நடத்தப்பட்டுள்ள PCR பரிசோதனை முடிவுகள் நாளைய தினம் வெளியிடப்பட்ட பின்னர், உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் அடுத்த 48 மணி நேரம் மிகவும் தீர்மானகரமானது. 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும், உயர் தரப்பரீட்சைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 321 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலும் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சுமார் 2 ஆயிரம் பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான முடிவுகள் கிடைத்ததும் பரீட்சைகளை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் பீரிஸ், பரீட்சைகளை ஒத்தி வைப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் 321 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.