ஆபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! தயவு செய்து உண்மையான தகவல்களை கொடுங்கள் - இலங்கை மக்களிடம் முக்கிய வேண்டுகோள்
தற்போது ஏற்பட்டிருக்கும் ஆபத்தான சூழலை கருத்திற் கொண்டு தயவு செய்து உண்மையாக தகவல்களை வழங்கி, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்களிடம் இந்த அவசர கோரிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்களுடன் பழகியவர்களை தேடும் நடவடிக்கையில் சிலர் உண்மையாக தகவல்களை வழங்க தயங்குவது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
சட்டவிரோத மது விற்பனை நிலையம் மற்றும் வேறு சட்டவிரோதமான இடங்களுக்கு சென்றதாக கூறினால், வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சிலர் உண்மையாக தகவல்களை வழங்க தயங்கி வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் காண்பது மாத்திரமே பொலிஸாரின் தேவையாக உள்ளது. சட்டவிரோத இடங்களுக்கு சென்றமைக்காக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என பொலிஸ் திணைக்களம் வாக்குறுதி வழங்குவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தகவல்களை வெளியிடும் நபர்கள் சென்று வந்த இடங்கள் தொடர்பான இரகசியத்தை பொலிஸார் பாதுகாப்பார்கள். தயவு செய்து உண்மையாக தகவல்களை வழங்கி, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.