கொரோனா தொற்றுக்குள்ளான திவுலபிடிய பெண்ணின் கணவர் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்

கொரோனா தொற்றுக்குள்ளான திவுலபிடிய பெண்ணின் கணவர் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்

கம்பஹா-திவுலபிடிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணுக்கு, அவர் பணியாற்றும் தொழிற்சாலைக்குள் வைத்தே கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது 16 வயது மகள் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளும் தற்போது காலி-ஹபராதுவ காவல்துறை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தலில் உள்ள குறித்த பெண்ணின் கணவன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தனது மனைவிக்கு ஆடைத் தொழிற்சாலையைத் தவிர வேறு எந்தவொரு இடத்தில் வைத்தும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், திவுலபிடிய பகுதியில் கொரோனா பரவல் எங்கிருந்து ஆரம்பமானது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கம்பஹா - மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

திவுலப்பிட்டியில், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியானதை அடுத்து, நேற்றிரவு வரை 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேலும் 32 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

மினுவாங்கொடையை சேர்ந்த 18 பேருக்கும், குருநாகலையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம், மொனராகலை, சீதுவ, ஜா-எல, மற்றும் மஹர முதலான பகுதிகளை சேர்ந்த தலா ஒவ்வொருவருக்கும் தொற்றுறுதியானது.

கட்டானையை சேர்ந்த 2 பேருக்கும், மீரிகமயை சேர்ந்த 3 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 10 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய தலா 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 3 கடலோடிகளுக்கும், செங்கடல் பகுதியில் இருந்;து வந்த கடல் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறதியானது.

இதன்படி, நேற்றைய தினம் 111 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 513 ஆக உயர்வடைந்துள்ளது.

3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.