கம்பஹாவில் இருந்து யாழ் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்- PCR பரிசோதனை முடிவுகள் இன்று

கம்பஹாவில் இருந்து யாழ் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்- PCR பரிசோதனை முடிவுகள் இன்று

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 மாணவர்களின் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 9 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், தாங்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களின் மாதிரிகள் பெற்றப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல், துணைவேந்தர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது, பாதுகாப்பு நடைமுறைகள் குறிதது ஆராயப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் மாதிரிகளும் பெறப்பட்டு பீ.சீஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.