உடன் நடவடிக்கை எடுங்கள் -கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு

உடன் நடவடிக்கை எடுங்கள் -கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு

அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்குள் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று (05) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை பின்பற்றுதல் மக்கள் மத்தியில் குறைவடைந்ததே நோய் தொற்றியதற்கான அடிப்படை காரணமாகும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசார நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சாதாரணமாக கொவிட் நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவனங்களிலும் தெரிவின் அடிப்படையில் PCR பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விசேடமாக குழுக்கள் அடிப்படையில் அதிகமானோர் தொழில் புரியக்கூடிய நிறுவனங்களில் PCR பரிசோதனையை தெரிவின் அடிப்படையில் அடிக்கடி நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தொழிற்சாலையில் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரிய வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மீண்டும் அதனைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட பாரிய முன்னெடுப்புக்களை நினைவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் அவ் வேலைத்திட்டங்களை பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தெரிவின் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் துறையினரின் பங்களிப்புடன் நிறுவன ஊழியர்களை தெரிவின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் நோய்த் தடுப்புக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பல விடயங்களை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். தற்போதைய சட்டதிட்டங்களை கொவிட் தடுப்பை நோக்கமாகக் கொண்டு வர்த்தமானியில் வெளியிடும் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்காக சுதேச மருந்துகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.