வெளியானது திவுலப்பிட்டிய பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவு..!
திவுலுப்பிட்டி மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் நேற்று மேற்கொள்ளபட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்
நேற்று கொவிட் 19 தொற்றுறுதியான 39 வயதுடைய குறித்த பெண்ணுடன் தொடர்புடைய ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த சிலருக்கும், மேலும் சிலருக்குமே கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணியாற்றும், மினுவாங்கொடை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தற்சமயம் தொழிற்சாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மினுவாங்கொடை தெவலபொல பொது சுகாதார பரிசோதகர் சுசந்த ரத்நாயக்க இதனைத் தெரவித்துள்ளார்.
பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய கம்பஹா - திவுலுப்பிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய, பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவர் பணியாற்றிய ஆடை தொழிற்சாலை உள்ளிட்;ட 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், திவுலப்பிட்டியில் கொவிட்-19 தொற்றுறுதியான, ஆடைத் தொழிற்சாலை ஊழியரான பெண்ணுடன் தொடர்புடைய 780 பேர் வரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.