முதல் முறையாக மூன்றாவது தடவையும் கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயது இளைஞன்!
ஆனமடுவை தென்னன்குரியா பிரதேசத்தில் 23 வயதான இளைஞனுக்கு மூன்றாவது முறையாகவும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். பரீட் தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞன் துபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் கடந்த 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார்.
வெலிகந்தை கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இவருக்கு கொரோனா தொற்றியுள்ளது முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிகந்தை வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய இளைஞன், அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
வீட்டில் தாயாருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இரணைவில் கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா தொற்றியிருப்பது கடந்த 2 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் நபர் இந்த இளைஞன் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.