தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை சென்னை வருகை

தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை சென்னை வருகை

தொடர்ந்து பெய்த மழையால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.

 


சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஆறுபோல ஓடியது. டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன.

மேலும் தொடர்ந்து பெய்த மழையால், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின்படி மத்திய அரசுக்கான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

 

முக ஸ்டாலின்


அதில், அக்டோபர் மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 52 சதவீத மழையும், நவம்பரில் பெய்யும் மழை அளவைவிட 49 சதவீதம் கூடுதலாகவும் மழை பெய்துள்ளது. இதனால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், மழையால் 54 பேர் மரணமடைந்துவிட்டனர். 9,600 குடிசைகளும், 2,100 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.

அதையடுத்து, தமிழகத்தில் சேதங்களை நேரடியாக பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த மத்திய குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராஜீவ் சர்மா தவிர, மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குநர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

நாளை சென்னைக்கு வரும் இக்குழுவினர், முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கின்றனர். அதன்பின், சில குழுக்களாக பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசுவார்கள்.