கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேனா? - பிரபு விளக்கம்

நடிகர் பிரபு கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. சென்னை தி. நகரில் இருக்கும் அவரின் இல்லத்தில் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு கலந்து கொள்ளவில்லை. பிரபுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதால் தான் அப்பாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் பரவியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபு, தனக்கு கொரோனா பாதிப்பு எல்லாம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காததன் காரணம், மழை பெய்தபோது வழுக்கி விழுந்ததால் பிரபுவுக்கு காலில் அடிபட்டதாம். அடிபட்ட காலோடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பாததால் அவர் வரவில்லையாம்.