போடைஸ்-டயகம வீதி காலவரையறையின்றி பூட்டு! பிரதேசசபைகளின் அதிரடி நடவடிக்கை

போடைஸ்-டயகம வீதி காலவரையறையின்றி பூட்டு! பிரதேசசபைகளின் அதிரடி நடவடிக்கை

போடைஸ் வழியாக ஹட்டன் டயகம செல்லும் வீதி திருத்தியமைக்கும் வரையில் காலவரையறையின்றி மூடப்பட்டள்ளது. நோர்வூட் பிரதேசசபையும் அக்கரபத்தனை பிரதேசசபையும் இணைந்தே குறித்த வீதியை மூட தீர்மானித்துள்ளது.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட போடைஸ் தோட்ட முகாமையாளர் விடுதி பகுதியிலும் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட எல்பியன் பகுதியிலும் நேற்று மாலை முதல் வீதி மூடப்பட்டு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை திருத்தியமைத்து அகலப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அறிவித்த போதிலும் இருசாராரும் குறித்த பாதையை திருத்தியமைக்க முன்வரவில்லை.

இந்நிலையில் கடந்த 01 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 50 பேர் வரையில் காயமுற்றனர். அதில் 30 பேர் வரை பாடசாலை மாணவர்களாவர் காயமுற்றவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு இதற்கு முன்னரும் விபத்துக்கள் இடம்பெற்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையிலே பயணிகள் பஸ் போக்குவரத்து சேவை இடம்பெற்று வருகின்றது.

எனவே அக்கரபத்தனை பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குறித்த வீதியை அகலப்படுத்துமாறு அபிவிருத்தி குழு கூட்டங்களில் பல்வேறு தடவைக்கள் அழுத்தம் கொடுத்த போதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் குறித்த வீதி தமக்கு உரித்துடையதல்ல என்று கூறியுள்ளது.

எனவே வீதி பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்றமையினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீதியை திருத்தியமைக்கும் வரையில் காலரவரையின்றி மூடுவதற்கு நோர்வூட் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போடைஸ் வழியான ஹட்டன் டயகம வீதியில் 10 தனியார் பஸ்ஸும் 04 இ.போ.ச பஸ்ஸும் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில்

மேற்படி வீதி திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கும் வரை வீதியை மூட டயகம ஹட்டன் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.