ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய-மஹிந்த அரசாங்கம்!

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய-மஹிந்த அரசாங்கம்!

அரசிலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்தியமைத்து செயற்படுத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்கட்சியினர் முன்வைத்து வரும் கோரிக்கையை கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

அந்த திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளே 20ஆவது திருத்தச் சட்ட யோசனை கொண்டுவரக் காரணமாக இருந்ததாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகள் பிரிவு ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு - இராஜகிரியவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவியும், சுகாதார அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி, 19ஆவது திருத்தம் மைத்திரி-ரணில் அரசாங்கம் கொண்டுவந்தமைக்கான காரணங்களை பட்டியலிட்டுக் காண்பித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற முடியாததினால், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்தை பறித்தெடுத்து நிழல் அரச தலைவராக செயற்படுவதற்கான நோக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார்.

ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியாது என்பதை 2015ஆம் ஆண்டிலேயே அவர் உணர்ந்து கொண்டார். மைத்திரி அரச தலைவராகியதும் அவரது அதிகாரங்களை சூட்சுமமான முறையில் பறித்தெடுக்க இந்த திருத்தத்தை சமர்பித்தார்கள்.

19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில விடயங்களில் குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை சரிப்படுத்தும்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்து வருகின்றனர். ஆயினும் ஒரு பால் கோப்பையில் சிறுதுளி விஷம் கலந்தாலும் மொத்த பாலும் விஷமாகிவிடும்.

கேக் செய்யும்போது சயனைட் கலந்துவிட்டால் முழுவதுமாக விஷமாகிவிடும். ஆகவே ஒருசில விடயங்கள் 19ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்தாலும் அது முற்றிலும் பிழையான திருத்தமாகும். ஆகவே தான் அனைத்து பிழைகளையும் திருத்துவதற்கான யோசனையாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.