சீன தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் போராட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

சீன தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் போராட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

சீன தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் அனுமதியில்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்டதன் ஆண்டு தினம், அந்த நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தேசிய தினம் நேற்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது.

ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்துவோர், சீன தேசிய தினத்தன்று போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்தகைய போராட்டங்களுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, ஹொங்கொங்கில் காஸ்வே பே பகுதிகில் பலர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹொங்கொங் அரசங்கத்தால் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

போராட்டங்களை ஒடுக்குவதற்காக நகரம் முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்படடோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

டவுன்டவுனில் 50க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் சுற்றி வளைத்து, பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு அவர்களின் மணிகட்டு கட்டப்பட்டது.

நகரின் மற்றொரு பகுதியில் போக்குவரத்தைத் தடுக்க பெட்ரோல் குண்டுகளை வீசிய இருவரைத் தேடுவதாக பொலிஸார் முகப்புத்தக பதிவில் தெரிவித்தனர்.

சீன மற்றும் ஹொங்காங் கொடிகளை பறக்கவிட்டவாறு ஹெலிகாப்டர்கள் துறைமுகத்திற்கு மேலே பறந்தன. அங்கு தலைமை நிர்வாகி கேரி லாம் மற்றும் மூத்த அதிகாரிகள் கடுமையான பாதுகாப்புக்கு இடையே ஒரு உத்தியோகபூர்வ தேசிய தின விழாவில் கலந்து கொண்டனர்.