உடனடியாக கைது செய்யுங்கள்! நீதி அமைச்சர் அலி சப்ரி போட்ட உத்தரவு
தொழில் வழங்குவதாக பணம் பெற்று ஏமாற்றும் மோசடி நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு நீதி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சில் எழுதுவினைஞர்,அலுவலக உதவியாளர்,சாரதி மற்றும் காவலாளி போன்ற பதவிகளுக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதம் மற்றும் நியமனக் கடிதம் வழங்கி பணம்மோசடி செய்வது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்தது.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட பல இளைஞர், யுவதிகள் கடந்த சில நாட்களாக நீதி அமைச்சிற்கு வருகை தந்துள்ளனர். அம்பாறை.நீர்கொழும்பு,கல்கிஸ்ஸ,தங்கொடுவ போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து இவ்வாறு நேர்முக பரீட்சைக்கு வந்துள்ளதோடு வந்த பின்னர்தான் அவர்கள் ஏமாற்றமடைந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் 17,500 ரூபா முதல் 1,85, 000 ரூபா வரை பணம் வழங்கியுள்ளனர். சமந்த என்ற பெயருள்ள நபரே இவர்களை ஏமாற்றியுள்ளதோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டே இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.