20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் மீதான பரிசீலனை நாளை..!

20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் மீதான பரிசீலனை நாளை..!

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை நாளைய தினம் முற்பகல் 9.30 வரை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் பிற்போட்டுள்ளது.

20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 39 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது

குறித்த மனுக்கள் தொடர்பில், முக்கியத்துவமிக்க சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு அனுமதிகோரி, 8 தரப்பினர்களினால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு 7.20 வரை மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன.

இதன்போது, 20ம் திருத்தச் சட்டமூல வரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில், 32 மனுக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்து நிறைவு செய்தனர்.

இதையடுத்து மேலதிக பரிசீலனை நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் இடம்பெற உள்ளன.

நேற்றைய பரிசீலனைகளின்போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, 20ம் திருத்தச் சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களில், நீதித்துறை சுயாதீனம், அடிப்படை உரிமை என்பன தொடர்பில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சமர்ப்பணம் முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், 20ம் திருத்தச் சட்டமூலம் ஊடாக, அரசியலமைப்பு சபை நீக்கப்படடுவதாக சுட்டி காட்டியுள்ளார்.

இந்த சட்டமூலத்தின் மூலம், ஜனாதிபதியை சட்டத்திற்கு மேலனவராக்குவது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதனை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், கட்டாயமாக பொதுக்கள் அபிப்பிராயத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றும் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.