உத்தரபிரதேசத்தில் இளம்பெண் உயிரிழப்பு – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் உயிரிழப்பு – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக மாநில உள்துறை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாநில உள்துறை செயலாளர் தலைமை வகிப்பார். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு அளிக்கும். வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடக்கும்” எனக்கூறினார்.

தொடர்ந்து ருவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்” என யோகி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, சமீபத்தில் சந்தீப், ராமு, லவகுசா மற்றும் ரவி ஆகியோர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த வழக்கில் சந்தீப் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.