20 ஆவது திருத்தம் தொடர்பான மேலதிக பரிசீலனைக்காக நாளை வரை ஒத்திவைப்பு

20 ஆவது திருத்தம் தொடர்பான மேலதிக பரிசீலனைக்காக நாளை வரை ஒத்திவைப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.