வெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்சை 44 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நேர்த்தியாக உள்ளது. அந்த அணியின் பீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். முதலாவது ஆட்டத்தில் கையில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேறிவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் பெங்களூருவிடமும், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும் வீழ்ந்தது. ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. முந்தைய தோல்வியை மறந்து வெற்றிக் கணக்கை தொடங்க ஐதராபாத் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி நம்பிக்கையுடன் செயல்படும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது