பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பயிரிடக்கூடிய பூ வகைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை எதிர்காலத்தில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் பூக்களை உற்பத்தி செய்வோரைப் பாதுகாக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டில் 65 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு நாட்டில் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவில் இருந்தே அதிக பூக்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் இருந்து மல்லிகைப் பூக்களே அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் வருடங்களில் பூக்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், பெறப்படும் வருமானத்தை 10 இலட்சம் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக, பூக்களை உற்பத்தி செய்வோருக்கு தொழிநுட்பப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.