20 ஐ தோற்கடிப்போம்! மாற்றுக் கருத்துக்கு இடமில்லை - சஜித் உறுதி

20 ஐ தோற்கடிப்போம்! மாற்றுக் கருத்துக்கு இடமில்லை - சஜித் உறுதி

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “20 ஐ தோற்கடிப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இது தனிப்பட்ட நபருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையிலேயே கொண்டுவரப்படவுள்ளது. அரசாங்கத்துக்குள் நிலவும் அதிகாரப்போட்டியின் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது.

நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருந்த அதிகாரங்கள் எல்லாம், தனி நபரிடம் குவிக்கப்படவுள்ளன. இதனால், சர்வாதிகார ஆட்சியே இலங்கைக்குள் ஏற்படும்.

எம்மைப் பொறுத்தவரை 19 இற்கு அப்பால் சென்று 19 பிளஸை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது.

19 இல் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நாட்டில் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தவே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டு பின்னர் அந்த வர்த்தமானிக்கு முரணாக செயற்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எல்லாம் உயர்வடைந்து, வாழவே முடியாத ஒரு நிலைமையில்தான் மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக எல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.