மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம்.
இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.
பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.
இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம்.
அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., அந்த வீடியோவை மீண்டும் போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம். இந்தத் தகவலை அந்த ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நண்பன் எஸ்.பி.பி.,யின் மறைவுக்கு இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாவிட்டாலும், திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.