அப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் அழகான நினைவில்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

நினைவிடத்தில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால், அருகில் உள்ள வயல்வெளி வழியாக வந்து பார்த்து செல்கின்றனர். இங்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களும், தங்களது பங்களிப்புடன் நினைவில்லம் கட்ட வேண்டும் என்று கிராம மக்களும், எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரணிடம் கோரிக்கை விடுத்தனர்

இதனை ஏற்றுக்கொண்ட அவர் தனது தந்தைக்கு அழகான நினைவில்லம் அமைக்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் அதற்கான தகவல் வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இரண்டு, மூன்று நாட்களில் காவல்துறையினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என எஸ்.பி.சரண் கூறினார்.