மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு அங்கு விஜய் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு எஸ்பிபி பாடல்கள் பாடியது மட்டுமின்றி அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது, இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் இருந்து விஜயை காத்து, போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து, அருகாமையில் நின்றவரிடம் விஜய் அளித்தார்.
விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் இது பற்றி ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறியதாவது: “கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என எனக்கு தெரிகிறது. தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது” என கூறி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது: “தளபதி.... தளபதி தான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்” என குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.