ஒரு லட்சம் டன் அரிசியினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஒரு லட்சம் டன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்த அமைச்சரவை பத்திரம் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் டன்; அரிசி நுகர்வுக்கு தேவையாகவுள்ளது.
விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தரவுக்கு அமைய குறித்த அரிசி தொகையை உருவாக்குவதற்கான 95 சதவீத நெல் தற்போது அரசாங்கம் மற்றும் தனியார் நெற் களஞ்சியசாலைகளில் இருக்க வேண்டும்.
பயிரிடப்படும் நெற்தொகை, காணியின் அளவு, விநியோகிக்கப்படும் உரம் உள்ளிட்டவை மதிப்பீடு செய்து இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
பாரியளவான நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களையும் அழைத்து அண்மையில் வர்த்தத்துறை அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
நெற்தொகை தொடர்பில் விவசாய பணிப்பாளர் நாயகம் எதனை கூறினாலும் அந்த அளவான நெற்தொகை தம்மிடம் இல்லை என இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இது போன்ற கருத்துக்கள் சந்தையில் செயற்கையான அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையை அதிகரிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என வர்த்தக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டில் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்கு சில வர்த்தகர்கள் முயற்சிப்பது பொதுவான விடயம் ஆகும.
எனினும் இந்த வருடம் அது போன்ற ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும், செயற்கையான அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றின் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.