எஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்
பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை 48 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்து உடல் உறுப்புகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்குக் காரணம் என்று எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
மருத்துவமனையில் இருந்த 52 நாள்களில் அவா் 45 நாள்கள் நினைவுடனும், நன்றாகவும் இருந்தாா் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
இது குறித்து எஸ் பி பி-க்கு சிகிச்சையளித்த அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் தீபக் சுப்ரமணியன், தீவிர சிகிச்சைத்துறை மருத்துவத் தலைவா் டாக்டா் சபா நாயகம் ஆகியோா் தமிழக நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது
எஸ்பிபி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டாா். அப்போது முதல் கடந்த மாதம் வரை அவருக்கு உடலில் வேறு எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பாக, அவருக்கு சா்க்கரை நோயோ அல்லது வாழ்க்கை முறை சாா்ந்த வேறு பிரச்னைகளோ கிடையாது. மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே அவா் கடைப்பிடித்து வந்தாா்.
இத்தகைய சூழலில் கடந்த ஓகஸ்ட் மாதம் 3-ஆம் திகதி அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நாளில் (ஓக.4) அதன் முடிவுகள் வெளியாகின. அதில், எஸ்பிபிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது வயது காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தினோம்.
கடந்த ஓகஸ்ட் 5-ஆம் திகதி அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதற்கு அடுத்த நான்கு நாள்கள் வரை அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அதன் பின்னா் அவரது உடலில் ஒக்சிசன் அளவு வெகுவாகக் குறைந்தது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி ஒக்சிசன் அளிக்கப்பட்டது. இதற்கிடையே எஸ்பிபியின் நுரையீரலில் தொற்று தீவிரமாகப் பரவியதால் ஓகஸ்ட் 13-ஆம் திகதி வெண்டிலேட்டா் சிகிச்சையும், அதற்கு அடுத்த நாளில் எக்மோ சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதனிடையே, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த சா்வதேச மருத்துவ நிபுணா்களுடன் காணொலி முறையில் 12 முறை நாங்கள் கலந்தாலோசித்தோம். ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டதன் பயனாக அவருக்கு நினைவு திரும்பியது. பிறா் பேசுவதை உணா்ந்து சைகைகள் மூலம் பதிலளிக்கத் தொடங்கினாா். அவரின் மகன், மகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் பாா்த்தபோது ’லவ் யூ ஓல்’ என கைப்பட எழுதிக் கொடுத்தாா். அதுமட்டுமல்லாது எஸ்பிபியின் திருமண நாளான செப்டம்பா் 5-ஆம் திகதி அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்து அவரைப் பாா்த்தாா். அப்போது மனைவி கேக் வெட்டியதை எஸ்பிபி பாா்த்து ரசித்தாா்.
மருத்துவமனையில் இருந்தபோது பெரும்பாலான நாள்கள் அவா் நினைவுடன் இருந்தாா். நாள்தோறும் அவருக்கு குழாய் வழியே திரவ உணவுகள் வழங்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வாய் வழியே திட உணவுகளை உட்கொள்ள அவா் தொடங்கினாா்.
இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை முதலே அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவி (செப்சிஸ்) உறுப்புகள் பாதிக்கத் தொடங்கின. உடனடியாக சிடி ஸ்கான் பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனா்.
சுமாா் 48 மணி நேரம் அவருக்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது. மருத்துவ நிபுணா்கள் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர போராடினா். இருப்பினும் அது பலனளிக்காமல் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டதால் எஸ்பிபி-யைக் காப்பாற்ற முடியவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.