சிறப்புற இடம்பெற்ற ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் உற்சவம் - பலத்த கெடுபிடி
வவுனியா வடக்கு - நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் இறுதி நாளான இன்று 108 பானைகள் வைத்து கோலகலமாக பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்ற திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது.
காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூஜை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், ஆலயத்திற்கு வருகை தந்த பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூரும் நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.